ஜம்மு கஷ்மீர் முதல்வர் முஃப்தி முகமது சயீத் டெல்லி மருத்துவமனையில் மரணமடைந்தார்

ஜம்மு-காஷ்மீர் முதல்வர் முப்தி முகமது சயீத் உடல் நிலக்குறைவால் மரணமடைந்தார், அவருக்கு வயது 79.

உடல்நிலை பாதிக்கப்பட்ட நிலையில் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் டிசம்பர் 24ம் தேதி சேர்க்கப்பட்டு, கடந்த 2 வாரங்களாக தீவிர சிகிச்சைப்பிரிவில் சிகிச்சை பெற்றுக்கொண்டிருந்தார் முப்தி முகமது சயீத். இந்நிலையில் அவரது உடல்நிலையில் கவலைக்கிடமாக உள்ளதாகவும், மருத்துவர்கள் அவரை தொடர்ந்து கவனித்து வருவதாகவும் மருத்துவமனை வட்டாரங்கள் நேற்று தெரிவித்தன.

தொடர்ந்து உடல் நிலை மோசமான நிலையில், இன்று காலை முப்தி முகமது சயீத் மரணமடைந்தார். ஜம்மு – காஷ்மீர் மாநிலத்தில், முதல்வர் முப்தி முகமது சயீத் தலைமையிலான மக்கள் ஜனநாயக கட்சி-பாஜக கூட்டணி ஆட்சி நடக்கிறது. முப்தி மரணமடைந்துள்ள நிலையில், அவரது மகளும், எம்.பி.யுமான மெகபூபா முப்தியை முதல்வராக்க, மக்கள் ஜனநாயக கட்சித் தலைவர்கள் முடிவு செய்து உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

குடியரசுத் தலைவர் இரங்கல்

பிரணாப் முகர்ஜி வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், உயிரிழந்த சயீத்தின் குடும்பத்துக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு முஃப்தி முகம்மது சயீத் ஆற்றிய சேவை காலத்துக்கும் நினைவில் கொள்ளத்தக்கது என்று கூறியுள்ளார்.

இதே போல, மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், முஃப்தி முகம்மது சயீத் மரணம் குறித்து தகவல் அறிந்ததும் மிகுந்த வேதனைக்குள்ளானேன். ஏழை, எளிய மக்கள் மீது மிகுந்த அன்பு செலுத்தியவர் அவர் என்றும் தெரிவித்தார்.

முப்தி முகமது சயீது வரலாறு…

வக்கீலாக வாழ்க்கையை தொடங்கி, முதல்வராக மறைந்துள்ளார் ஜம்மு காஷ்மீர் முதல்வர் முப்தி முகமது சயீது. மத்திய உள்துறை அமைச்சராகவும், காஷ்மீர் முதல்வராக ஏற்கனவே ஒருமுறையும் பதவி வகித்த அனுபவம் இவருக்கு உண்டு.

ஜம்மு – காஷ்மீர் மாநிலத்தில், முதல்வர் முப்தி முகமது சயீது தலைமையிலான மக்கள் ஜனநாயக கட்சி-பாஜக கூட்டணி ஆட்சி நடக்கிறது. கடந்த ஆண்டு மார்ச் 1ம் தேதி, முதல்வராக முப்தி முகம்மது சையது பதவியேற்றார். பா.ஜ.வை சேர்ந்த நிர்மல்சிங் துணை முதல்வராகவும் பொறுப்பேற்றார். ஜம்மு காஷ்மீரின் பிஜேபெகாரா பகுதியில் 1936ம் ஆண்டு ஜனவரி, 12ம் தேதி பிறந்தார் முப்தி முகமது சயீது.

தொடக்கக் காலத்தில் வழக்கறிஞராகப் பணிபுரிந்தார். காங்கிரசில் அரசியல் வாழ்க்கையை ஆரம்பித்தார். பின்னர் விலகினார். 1989-90ல் வி.பி.சிங்., தலைமையிலான மத்திய அரசில், உள்துறை அமைச்சராக பொறுப்பு வகித்தவர். இந்தியாவின் முதலாவது முஸ்லிம் உள்துறை அமைச்சர் முப்தி முகமது சயீது என்ற பெருமை அவருக்கு உண்டு.

mufti-mohammad-sayeed

mufti mohammad sayeed

உள்துறை அமைச்சர் ஆன சில நாள்களில் இவருடைய மூன்றாம் மகள் ரூபையா சயீது சில தீவிரவாதிகளால் கடத்தப்பட்டார். அந்தப் தீவிரவாதிகளின் கோரிக்கைக்கு ஏற்ப 5 தீவிரவாதிகளை அரசு விடுதலை செய்தது. 1999 ஆம் ஆண்டு ஜூலை மாதம், தம் மகள் மெகபூபா முப்தியுடன் இணைந்து ஜனநாயக கட்சியைத் தொடங்கினார். முன்னதாக, 2002 நவம்பர் முதல் 2005 நவம்பர் வரை காஷ்மீர் முதல்வராக பணியாற்றிய அனுபவமும் இவருக்கு உண்டு.