மணல் சுரண்டல் பற்றி பேசினால் போதுமா ??? மக்கள் மனநிலை மாற்று மணலுக்கு எப்போது மாறும் ??

மக்களைப் பொறுத்தவரை அவர்கள் வீட்டு வாசலில் கொட்டும் மணலில் கையை விட்டால் தண்ணீர் சொட்ட வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள்.

ஆனால் ஆற்று வளத்தைச் சூரையாடுகிறோம் என்றெல்லாம் கவலையை வெளிப்படுத்துகிறார்கள். ஆனால் அவர்களுடைய பொறியாளர் மாற்று மண் என்று வார்த்தையை உச்சரிக்க ஆரம்பிப்பதற்குள் அதற்குத் தடை போடத் தலைப்படுகின்றனர்.

மாபியாக்களைப் பொறுத்தவரை ஆற்று மணல் இருக்கிற வரைதான் ஆட்டம் எல்லாமும். இரண்டு யூனிட் என்று சொல்லி விட்டு ஐந்து யூனிட் வரை ஆட்டையைப் போடும் நிதர்சன நிலையை அவர்கள் உடைக்கத் தயாராக இல்லை.

இந்த விவகாரத்தைப் பொறுத்தவரை இருபெரும் திராவிடக் கட்சிகளுக்குமான முக்கிய வருவாய் ஆதாரம் என்பது மணல் வியாபாரமே.

மணல் வியாபாரம் முழுக்க இந்த இரண்டு கட்சிகள் மட்டுமல்லாமல் பலம் பொருந்திய பிற கட்சிகளின் குறுநில மன்னர்களின் கைகளில் இருக்கிறது.

அதை உடைப்பது என்பது இயலாத காரியம்தான். ஆனால் அதைவிட உடைக்க முடியாத ஒன்று இருக்குமென்றால் அது மக்களின் மனநிலைதான்.

பெட்ரோமேக்ஸ் லைட்டேதான் வேண்டும் என்கிற மனநிலையில் இந்த விஷயத்தில் அவர்கள் இருக்கிறார்கள் என்பதைத் துணிந்து சொல்ல முடியும்.

மாற்று மணல் குறித்த தெளிவான புரிதல்களை மக்கள் மத்தியில் கொண்டு வருவதுதான் இப்போதைய உடனடித் தேவை.